ஸ்ரீ:

நவவித பக்தி – 01 (08.02.2012)
வாஸூதேவ பரா வேதா வாஸூதேவ பரா மகா:
வாஸூதேவ பரா யோகா வாஸூதேவ பரா: க்ரியா:
வாஸூதேவ பரம் ஞானம் வாஸூதேவ பரம் தப:
வாஸூதேவ பரோ தர்மோ வாஸூதேவ பரா கதி:
… அறிவின் இறுதி நோக்கம் அல்லது இலக்காகயிருப்பவர் ஸ்ரீமந் வாஸூதேவனே. வேதமும் இதைத்தான் இலக்காகக் கொண்டுள்ளது. நாம் செய்யும் யோகம், செயல்கள், தபஸ், நம்முடைய ஞானம் எல்லாமும் அவன் திருவடி ஒன்றினையே இலக்காகக் கொண்டு அவன் தாளே கதியென்று இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை செவ்வனே மேற்கொள்ள வேண்டும். அவனை அடைவதற்கு மார்க்கங்கள் பல இருந்தாலும் அவனுக்கும் நமக்கும் சிறந்த இணைப்பாக, ஒரு பாலம் போன்று இருப்பது நம்முடைய அபரிமிதமான அன்பு அதாவது பக்தித் தொண்டாகும்.
அரங்கனே ஸ்ரீவாஸூதேவன். பாஞ்சராத்ரம் ஸ்ரீவாஸூதேவரின் மூலமந்திரத்தினைக் கொண்டுதான் ஆராதிக்கச் சொல்கின்றது. ஸ்ரீரங்கத்தில் மூலவரை கண்ணனாகவும், உற்சவரை இராமராகவும் ஆச்சார்யர்கள் வர்ணிப்பர். இவர்தான் பரமாத்மா..! எல்லா தெய்வங்களுக்கும் தெய்வமான இவர் பொற்பாதம் வணங்குவோம்..!
பக்தி…!
மூன்றே எழுத்துக்கள்தாம்…! ஆனால் அதன் வீர்யம் எத்தனை ஆச்சர்யமானது..!?.
இந்த பக்தித் தொண்டினை ஒன்பது விதமாக பகுத்துள்ளனர்.
“ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
சக்யம் ஆத்ம நிவேதனம்“
அவையாவன:
1) ஸ்ரவணம் – செவியுறுதல்
2) கீர்த்தனம் – பாடுதல்
3) ஸ்மரணம் – சிந்தனை செய்தல் அல்லது எப்போதும் நினைத்தல்
4) பாதஸேவனம் – தாமரைப்பாதங்களை சேவித்தல்
5) அர்ச்சனம் – வழிபடுதல்
6) வந்தனம் – பிரார்த்தனை செய்தல்
7) தாஸ்யம் – உத்தரவுகளை நிறைவேற்றுதல்
8) ஸக்யம் – நட்பு கொள்ளுதல்
9) ஆத்மநிவேதனம் – பூரணமாக சரணடைதல்
இந்த ஒன்பது விதமான பக்தித் தொண்டினைப் பற்றியும் இனி வரும் காலங்களில் காண்போமா..?
நவவித பக்தி-02 (17.02.2013)
நாம் நன்கு நலமாகயிருப்பதே ஒரு பெருஞ்செல்வமாகும். அதிலும் நாம் செவிச்செல்வம் என்னும் கேள்விச்செல்வம் இருக்கின்றதே, அது தலையாயச் செல்வம்.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை (குறள் 411)
… வள்ளுவப்பெருமான் இக்கேள்விச்செல்வத்தினைப் பற்றி மிகச சிறப்பாகக் குறிப்பிடுகின்றார். சான்றோர்களின் சொல்லை நாம் கேட்கவேண்டும். அதன்படி நடக்கவேண்டும். நல்லோர்களின் சொல்லைக் கேட்டு நடப்பவன் நல்லதையே அடைவான். எந்நாளும் கெட மாட்டான். நாம் நல்லவர்களின் துணையை நாடிச்செல்லுதல் வேண்டும். நம் சூழ்நிலையினை நன்கு அமைத்துக் கொள்ள வேண்டும். மனிதன் சூழ்நிலையினால் பாதிக்கப்படுகின்றான் — சூழ்நிலையினை பாதிப்படையவும் செய்கின்றான்.
எல்லோருக்கும் மரணத்தினைப் பற்றிய முன்னறிவிப்பு வந்ததில்லை. ஆனால் பரீட்சித்து மஹாராஜன் தன் மரணத்தினைப் பற்றி அறிந்தார். தான் இறக்கும் வரை உணவு, நீர், துாக்கம் முதலியவற்றைத் தொலைத்தார். பகவானின் உன்னதமான லீலைகளை கேட்டவண்ணம் தம் இன்னுயிரைத் துறந்தார்..! கேட்டலின் அதுவும் பகவானது பிரபாவங்களைக் கேட்டலின் சக்தி மகத்துவமானது.
பரீட்சித்து மஹராஜன் இப்படி..! நாரதர் தம் தாயின் கருவிலிருந்தபோதே பகவானின் பிரபாவங்களை கேட்டவர்..!
நாரத முனிவர் சிரஞ்சீவி..! சாகாவரம் பெற்றவர்..! ஆனால் அவருக்கும் ஒரு முற்பிறவி உள்ளது..! அந்த முற்பிறவியில் நாரதரின் தாய் ஒரு வேலைக்காரியாவாள்..! அவள் ரிஷிகள் வாஸம் செய்யும் ஆஸ்ரமத்தில் வேலை செய்து வந்தாள்..! அந்த ஆஸ்ரம சூழ்நிலை நாரதர் தாயின் கருவிலிருக்கும் போதே ஒரு தெய்வீகமான சூழ்நிலையினை அவருக்கும் அவரது தாய்க்கும் அளித்தது..!
நாரதர் பிறப்பிற்கு பின் அங்குள்ள சிறந்த முனிவர்களால் அவருக்கு நல்லதொரு ஆன்மீக அறிவு புகட்டப்பட்டது..! சாதாரண பெண்மணியான நாரதரின் தாய்க்கு நாரதர் ஒரே மகன்..! அவருக்கு ஐந்து வயது கடந்த சமயம் அவளது தாய் பசுவிடமிருந்து பால் கறப்பதற்காக வெளியே சென்றபோது விஷப்பாம்பு ஒன்று கடித்து மாண்டாள்..!
நாரதர் கடினமான காடுகள் மலைகள் பற்பல வனவிலங்குகள் நதிகள் அனைத்தையும் தமக்கு மஹரிஷிகளால புகட்டப்பட்ட ஹரியின் நாமாவினை இசைத்தப்படி கடந்தார். அருமையான சூழலில் அமைந்த ஒரு ஆலமரத்தினடியில் அமர்ந்து தம் சத்புத்தியைக் கொண்டு பரமாத்வைத் தியானித்தார். நேரிலும் கண்டார். ஒரு முறைதான் ஹரி அவர் முன் தோன்றினார். புரணத்துவம் அடையாத பக்திமானும், பௌதீகப் பற்று விடுபடாதவர்களும் என்னைக் காண்பது கடினம் என்றார் பகவான். உலகப்பற்றறுத்த நாரதர் ஹரியின் நாமாவினையும், புகழையும், லீலைகளையும் இடைவிடாது பாடியபடி உலகமெங்கும் சுற்றித் திரிந்தார். கிருஷ்ணரின் சிந்தினையில் ஆழந்தபடியே அவருக்கு மரணம் சம்பவித்தது. அவரது ஆத்மா காத்திருந்தது. யுகம் முடிந்தது. ஸ்ரீஹரி பிரளயநீரில் ஆலிலை மேல் சயனித்திருந்த போது, பிரும்மா பகவானுக்குள் கலந்தார். பிரும்மாவின் சுவாசத்தில் நாரதரின் ஆவியும் கலந்து ஸ்ரீஹரியிடம் ஐக்கியமானது. 432 கோடி சூரிய ஆண்டு கழிந்தது. பிரும்மா படைப்புத் தொழிலைத் தொடங்கியபோது மரீசி, ஆங்கிரஸ் மற்றும் அத்ரி போன்ற மஹரிஷிகள் உண்டாயினர். அவருடன் நாரத மஹாமுனியும் அழிவற்ற ஒரு திவ்யமான சரீரத்தோடு, ஈரேழு பதினான்கு உலகும் பயணம் செய்யும் ஆற்றலோடு, உடல் மற்றும் ஆத்மா என்ற பாகுபாடு இல்லாத ஒரு புனிதத்தோடு தோன்றினார். பிரும்மாவினால் தோன்றியதால் பிரும்மபுத்திரர் ஆனார். ஸ்ரீஹரியின் பேரன் ஆனார். அழிவில்லாத ஸ்ரீரஞ்சீவியானார். தெய்வீகமான வீணையின் ஸ்வரத்தோடு பகவானின் புகழை இடையறாது பாடிக்கொண்டிருக்கின்றார். அவர் புகழைப்பாடும் பக்தர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கின்றார். அம்மாமுனிவரின் பொற்பாதம் வணங்கி மேலும் காண்போம்…!